உள்ளூர் செய்திகள்

அதிகாரி போல் நடித்து அங்கன்வாடி மைய குழந்தைகளிடம் நகை திருடிய பெண் கைது

Published On 2023-03-16 12:21 IST   |   Update On 2023-03-16 12:21:00 IST
  • கைதான பெண்ணிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 4 நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தில் பெண் ஒருவர் அதிகாரி போல் சென்று அங்கிருந்த 2 குழந்தைகள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்துகளை திருடி சென்றார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் அந்த பெண்ணை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உதயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை தேவாலய பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நின்றிருந்தார்.

போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த பெண் மதுரை மாவட்டம் சாப்டூர் கரிசல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர பாண்டி மகள் காவியா (வயது 29) என்பதும், 4 நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அதிகாரி போல் சென்று குழந்தைகளிடம் நைசாக தங்க தாயத்துகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் இதேபோன்று வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News