உள்ளூர் செய்திகள்

ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்க்ஷா திருவிழா

Published On 2024-03-06 05:06 GMT   |   Update On 2024-03-06 05:06 GMT
  • உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
  • இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும் 'யக்க்ஷா' கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் 'யக்க்ஷா'கலைத் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.


அதன்படி கங்கா மருத்துவமனையின் இயக்குனர், மருத்துவர் திரு. ராஜ சபாபதி அவர்களும், சமூக வலைதள பிரபலமும், புகழ்பெற்ற திரைப்பட நடிகையுமான அருணா முச்செர்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கர் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று தலைமுறைகளாக பாடி வரும் இவர், இதுவரையில் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். சிறந்த கர்நாடக இசைக் கலைஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


இவர் நிகழ்த்திய இசைவிருந்தில் இவரோடு அஜிங்யா ஜோஷி (தபளா), அபிஷேக் ஷிங்கர் (ஆர்மோனியம்), சாய்பிரசாத் பாஞ்சல் (தம்பூரா) உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். 'யக்க்ஷா' திருவிழாவில் வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

Tags:    

Similar News