உள்ளூர் செய்திகள்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை

Published On 2023-02-01 10:39 GMT   |   Update On 2023-02-01 10:39 GMT
  • ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.
  • மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இந்து மக்கள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நகை கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற மணிகண்டனை, சிறிது தூரத்தில் 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய முகமூடி அணிந்த ஒரு கும்பல் வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

பின்பு அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மணிகண்டனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பலரிடம் விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டனை கொன்ற கொலையாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் 8 பேர் சிக்கினர்.

மதுரை ஜெய்ஹிந்து புரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு ஹரிகரபாபு, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25), பாரதியார் ரோடு நேதாஜி நகர் அய்யப்பன் (26), தேவர் நகர் முதல் தெரு கார்த்திக்(26), தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தை சேர்ந்த தினேஷ் (27), பாண்டி உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட மணிகண்டன் அந்த பகுதியில் நகைக்கடை மற்றும் பழைய நகைகளை அடகு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது அவர் பழைய நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரது மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான், நேற்றிரவு மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.

அதே வேளையில் பழைய நகைகளை அடகு பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணிகண்டன் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News