உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே பலத்த மழை: பழமையான தொகுப்பு வீடு இடிந்தது

Published On 2023-09-28 10:34 GMT   |   Update On 2023-09-28 10:34 GMT
  • தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
  • கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன.

மதுரை:

மேலூர் அருகே மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி பகுதியில் 1,990-ல் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது முத்து புளியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த முத்து புளியம்மாளின் 5 வயது மகன் சேவுகமூர்த்தி காயமடைந்தார். முத்து புளியம்மாளும், அவரது மகளும் காயமின்றி தப்பினர். சேவுகமூர்த்தி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஆர்.ஓ. சக்திவேல், ஆர்.டி.ஓ. ஜெயந்தி, மேலூர் தாசில்தார் செந்தாமரை, கொட்டாம்பட்டி யூனியன் அலுவலர்கள், மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது பொதுமக்கள் தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

இங்குள்ள தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனால் கட்டிடம் சேதமடைந்து பல வீடுகளில் மேற்கூரைகள் சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன. அதனால் இங்கு வசிப்பவர்கள் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன. அப்போது அங்கு வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிந்தபின்பு மீண்டும் வீடுகளுக்கு வந்தோம். அப்போது முதல் கட்டிடங்கள் உறுதி தன்மையற்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய வீடுகள் கட்டித்தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக உயர் அதிகாரிகள் இங்குள்ள தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News