உள்ளூர் செய்திகள்

காங்கேயம் அருகே 3 அரசு பஸ்கள் அடுத்தடுத்து மோதல்- 20 பேர் படுகாயம்

Published On 2023-05-27 05:08 GMT   |   Update On 2023-05-27 05:08 GMT
  • பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர்.
  • பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிச்சாகவுண்டன்புதூர் அருகே இன்று காலை 5 மணிக்கு காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இதனை சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

இதுபோல் கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதனை விஜயகுமார் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

2 அரசு பஸ்களும் காங்கயம் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பிச்சாகவுண்டன்புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பல்லடம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு நின்றது.

அப்போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென, டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ் கோவை பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் அரசு டவுன் பஸ், கோவை பஸ்சின் பின்பகுதி, மற்றொரு அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர். பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பெண்கள் அடங்குவார்கள். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே அதிகாலை நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Tags:    

Similar News