உள்ளூர் செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

Published On 2023-10-06 23:30 IST   |   Update On 2023-10-06 23:30:00 IST
  • தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
  • பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பூட்டிய கோவிலுக்குள் இருந்து திடீரென்று சத்தம் வந்தது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் 2 பேர் கோவிலுக்குள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடி சென்றனர்.

உடனே ஊர் பொது மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது கோட்டப்பட்டி அருகே உள்ள மலைத்தாங்கி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

மேலும் அவருடன் வந்த மற்றொருவர் பணத்துடன் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஊர்பொதுமக்கள் மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடனை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் கோவிலின் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கணேசனும், அவரது கூட்டாளியும் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.

மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சேதப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அங்குள்ள பள்ளியறையில் பூட்டை உடைத்து பொருட்களை திருட முயன்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கோவிலுக்குள் தங்க நகைகள் மற்றும் எவ்வளவு ரொக்கம் திருட்டுப் போய் உள்ளது? எனவும் வேறு ஏதேனும் பொருட்கள் திருடு போய் உள்ளதா? எனவும் போலீசார் பிடிப்பட்ட கணேசனி்டம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதே கோவில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இதேபோல் கொள்ளை முயற்சி திருடர்கள் ஈடுபட்டு உள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் காட்டு தீ போல பரவியதை அடுத்து இதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News