உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் சரிவு

Published On 2023-04-08 09:46 IST   |   Update On 2023-04-08 09:46:00 IST
  • கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது.
  • கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் 8 கோடி கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் நிர்ணயம் செய்கிறது. இந்த விலை நிர்ணயம் வாரத்திற்கு 3 நாட்கள் செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது. தொடர்ந்து 25-ந் தேதி 10 காசு குறைந்து 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 2 வாரத்துக்கு பின் நேற்று 30 காசு குறைந்தது. இதனால் முட்டை விலை 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது. பெங்களூர், சென்னை பகுதிகளுக்கு ஹைதராபாத் முட்டைகள் வரத்து உள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலையை குறைக்காவிட்டால் விற்பனையின்றி முட்டைகள் பண்ணையிலேயே தேக்கமடைந்து விடும். அதனால் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News