உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2022-10-16 05:42 GMT   |   Update On 2022-10-16 05:42 GMT
  • கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
  • பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

காட்டுமன்னார் கோவில்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் வடக்கு கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). தி.மு.க. பிரமுகர்.

இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் ஓடும் வடலாற்றுக்கு சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதனை கவனிக்காமல் சுதாகர் ஆற்றில் இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனாலும் சுதாகரை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

இன்று காலையும் சுதாகரை தேடும்பணி நடந்தது. அப்போது கஞ்சன்கொல்லை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுதாகரின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அந்த உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

பின்னர் சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News