பல்லாவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவி பலி- சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்
- சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ராகஸ்ரீ (வயது6). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமி ராகஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு காய்ச்சல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ராகஸ்ரீ நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் பரிசோதனையில் சிறுமி ராகஸ்ரீக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உடல் நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.