உள்ளூர் செய்திகள்

சினிமா ஆசையில் இருந்த வாலிபரின் உயிரை பறித்த குளம்- கடவுள் கூட காப்பாற்றவில்லை என்று தாய் கண்ணீர்

Published On 2023-04-06 16:10 IST   |   Update On 2023-04-06 16:10:00 IST
  • தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார்.
  • தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.

சென்னை:

கோவில் குளத்தில் முழ்கி பலியான நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா(22) தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக இருந்தார். சினிமாவில் ஆர்வம் கொண்டு இருந்த அவர் சின்னத்திரையில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சினிமா ஆசையில் இருந்த அவரது கனவு தண்ணீரோடு மூழ்கி போய் உள்ளது. அவரது வீட்டில் நடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தில் புன்சிரிப்புடன் இருக்கும் சூர்யாவின் காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்க செய்து உள்ளது.

சூர்யா நேற்று காலை தர்மலிங்கேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு செல்வதாக தனது தாய் கீதாவிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது சூர்யாவை தாய் கீதா எச்சரித்தார். உனக்கு நீச்சல் தெரியாது... அதனால் நீ குளத்தில் இறங்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். இதற்கு சூர்யா நான் தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று கூறி சென்று உள்ளார்.

ஆனால் தீர்த்தவாரியின் போது குளத்தில் கூட்டம் இறங்கியதும் ஆசைப்பட்ட சூர்யா, தனது தாயின் எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கிய சூர்யா நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் அவரது சினிமா ஆசை கனவுகளுடன் பலியாகி விட்டார்.

இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை மிகவும் கலங்க வைத்து உள்ளது. எச்சரிக்கையையும் மீறி தண்ணீரில் மூழ்கி பலியான மகன் சூர்யாவின் நிலையை நினைத்து தாய் கீதா கண்ணீருடன் உள்ளார். அவருக்கு ஆறுதல் கூற வழியில்லாமல் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

இதுகுறித்து சூர்யாவின் தாய் கீதா கூறும்போது, தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை செய்து இருந்தேன். ஆனாலும் சூர்யா தண்ணீரில் இறங்கி மூழ்கி பலியாகிவிட்டான். நான் மட்டும் அங்கே இருந்திருந்தால் என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி இருப்பேன். கடைசியில் அந்தக் கடவுள் கூட என் மகனை காப்பாற்றவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

பட்டப்படிப்பு முடித்த சூர்யா சினிமாவில் அதிக ஆசை கொண்டு இருந்தாலும் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் தனது தந்தைக்கும் உதவியாக இருந்தார். வேலை இல்லாத சமயத்தில் தன்னுடைய தந்தைக்கு உதவி செய்வதிலும், உணவு ஆர்டர் கொடுத்தவர்களிடம் சரியான நேரத்தில் உணவுகளை  கொண்டு போய் சேர்ப்பதிலும் முழு உற்சாகமாகவும் ஈடுபாடோடும் செய்ததாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

சூர்யாவின் அண்ணன் சந்தோஷ் கூறும்போது, நான் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போது சூர்யா வெளியே சென்றான். சூர்யா இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை என்றார்.

சூர்யாவின் பள்ளிகால நண்பர்கள் கூறும்போது, பங்குனி உற்சவம் தொடங்கிய நாள் முதல் சூர்யா மிகவும் பிசியாக இருந்தான். அவனை கடந்த ஒரு வாரமாக நாங்கள் சந்திக்கவில்லை. தற்போது அவன் இறந்து விட்டான் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. அவன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தான் என்றனர்.

சூர்யாவின் மறைவு அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதேபோல் மடிப்பாக்கம் பாலையா கார்டனில் வசித்த என்ஜினீயரிங் பட்டதாரியான யோகேஸ்வரன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் ஆன்மீக சேவையில் எப்பொழுதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் பங்குனி உற்சவம் உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆன்மிக சேவையாற்றுவார் என்று இவருடைய நண்பர்கள்  சோகத்துடன் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்களான வானேஷ், ராகவ், ராகவன் ஆகியோரும் எதிர்கால வாழ்க்கை குறித்து பல்வேறு கனவுகளுடன் இருந்தனர். அவர்களது வாழ்க்கையும் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி போய் விட்டது.

Tags:    

Similar News