உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்

Published On 2023-06-24 07:50 GMT   |   Update On 2023-06-24 07:50 GMT
  • சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.
  • மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை:

சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஏட்டு ரமேஷ். உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே உயரிழந்து விட்ட நிலையில் அவர்களது மகன் திவ்யேஷ், ரமேசின் சகோதரி கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

உயிரிழந்த ஏட்டு ரமேசுடன் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர். "உதவும் உறவுகள் 99" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.14 லட்சம் வரையில் (ரூ.13 லட்சத்து 93 ஆயிரம்) நிதி திரட்டினர். இந்த மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பணத்தை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 32,300-க்கான காசோலை திவ்யேசிடம் வழங்கப்பட்டது.

ஏட்டு ரமேசின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் இந்த உதவும் குணத்தை அனைவரும் பாராட்டினார்கள். 2,727 காவலர்கள் சேர்ந்து இந்த பணத்தை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News