திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்- பயணிகள் எதிர்பார்ப்பு
- சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு சென்று தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்ய முடியும்.
- திருவள்ளூரில் ஏழு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்த தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் புறநகர் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.
மாவட்ட தலைநகராக திகழும் திருவள்ளூரில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் சம்பந்தமாக, டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்படாததால் அவர்கள் வெளியூர் செல்ல, சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு சென்று தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்ய முடியும். இதனால் கால விரயம், அலைச்சல் வீண் செலவு ஏற்படுகிறது.
எனவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்படும், கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்துார் இன்டர்சிட் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கூட்டமைப்பினர் நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சென்னை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணியர் சங்கத்தினருடன் ரெயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் மற்றும் ரெயில் பயணியர் உபயோகிப்பாளர் குழு உறுப்பினருமான ஜெயபால்ராஜ் கலந்து கொண்டு திருவள்ளூரில் ஏழு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தற்போது ஏராளமான புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்கிறது. இதனால் அங்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே போர்டு விதிகள் அனுமதிக்கவில்லை என தெரிவித்து உள்ளனர். ரெயில்வே நிர்வாகத்தின் இந்த நிராகரிப்பால் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ரெயில் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.