2-ம் வகுப்பு மாணவரை கடித்து குதறிய வெளிநாட்டு இன நாய்- பக்கத்து வீட்டு தம்பதி மீது வழக்கு
- நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது.
- சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாயை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு இருந்தனர்.
நாய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுவன் மீது திடீரென ஆக்ரோஷம் அடைந்து பாய்ந்து கடித்தது. அதிர்ச்சியடைந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டான். அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று நாயிடம் இருந்து சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில் சிறுவனின் கழுத்து, மார்பு, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுவனின் பெற்றோர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பின்னர் சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நாயின் உரிமையாளர்களான கார்த்திக் லெனின், அவரது மனைவி திவ்யா ஆகியோர் மீது கவனக்குறைவாக செயல்படுதல், தனி நபருக்கு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.