திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி
- அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
- 1 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயில்வோருக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்,
இந்த விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, காமராஜர் சிலை அருகே நிறைவு அடைத்தனர்.
இதில் பங்கேற்றோர் மாணவ-மாணவிகள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
தற்போது அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. 1 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் கல்வி பயில்வோருக்கு 20 சதவீதம் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க, அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதுபோல் பல திட்டங்களை அரசு வழங்குகிறது. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து திட்டங்களை பெற்று பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என கூறினார்.
இந்த பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்டக் கல்வி அலுவலர் எல்லப்பன், திருவள்ளூர் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வட்டார கல்வி அலுவலர் குருநாதன், பூவராகவன், பாபு, பள்ளி துணை ஆய்வாளர் சவுத்ரி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடராஜ், பத்மஸ்ரீ பபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.