ஆவடியில் போலீஸ் போல் நடித்து வாலிபரிடம் நகை கொள்ளை
- பொன்னியம்மன் மேடு காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன்.
- வேதநாதன் விசாரித்த போது போலீஸ் போல் நடித்து டிப்-டாப் வாலிபர் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருநின்றவூர்:
செங்குன்றம், பொன்னியம்மன் மேடு காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன்(23).இவர் ஆவடி பஸ் நிலையத்தில், செங்குன்றம் செல்ல நேரு பஜார் மார்க்கெட் வழியாக நடந்து சென்றார்.
அப்போது வேதநாதனை வழிமறித்த டிப்-டாப் ஆசாமி, தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் மப்டி உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவரிடம், உன் மேல் சந்தேம் உள்ளது. நீ ஒரு பெண்ணை பஸ்நிலையத்தில் இருந்து கடத்திச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. உன்னை கைது செய்ய வந்துள்ளேன். கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இதனால் பயந்து போன வேதநாதன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறி தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்ட டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் சந்தேகம் அடைந்த வேதநாதன் விசாரித்த போது போலீஸ் போல் நடித்து டிப்-டாப் வாலிபர் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆவடி போலீஸ் நிலையத்தில் வேதநாதன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.