உள்ளூர் செய்திகள்

சட்டசபை விவகாரம்: ஜனாதிபதியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

Published On 2023-01-12 07:20 IST   |   Update On 2023-01-12 07:20:00 IST
  • கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
  • தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.

சென்னை :

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.

இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.

இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News