நொளம்பூரில் தம்பியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொன்ற அண்ணன்
- சந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டார்.
- அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அம்பத்தூர்:
சென்னை, நொளம்பூர், 1-வது அவன்யூவை சேர்ந்தவர் ராசு. இவர் மெட்ரோ வாட்டரில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனகா. இவர்களது மகள் மகாலட்சுமி(5). ராசுவின் தம்பி சந்திரன் என்கிற விக்கி(வயது19). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டார். அவரை அண்ணன் ராசு கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் சந்திரன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் மகள் சிறுமி மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இதனை கண்ட சந்திரன், சிறுமி மகாலட்சுமியிடம் இருந்த செல்போனை பறித்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் சிறுமியை அடித்ததாகவும் தெரிகிறது.
இதனை கண்ட ராசு, தம்பி சந்திரனை கண்டித்தார். இதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் கோபம் அடைந்த ராசு, அருகில் கிடந்த பெல்ட்டால் தம்பி சந்திரனின் கழுத்தை நெறித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சந்திரனின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.