உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க.வில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு- டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-08-15 09:35 GMT
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
  • தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பூந்தமல்லி:

சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2650 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 3 ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருமண மண்டபத்திற்கு உள்ளேயும், சிறப்பு அழைப்பாளர்கள் மண்டபத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக அரங்கிலும் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டிடிவி தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு அடையாறு, கிண்டி, பட்ரோடு, நந்தம்பாக்கம், ராமாபுரம், போரூர், 200 அடி ரோடு, வானகரம் வழியாக 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தார். வரும் வழியில் மேளதாளம் முழங்க டிடிவி தினகரனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வீரத்தலைமையின் கீழ் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்பது.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறச்செய்ததோடு, கழகத்தை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி, எதிர்வரும் களத்திற்கு ஆயத்தமாக்கி வரும் டி.டி.வி. தினகரனுக்கு இப்பொதுக்குழு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஆடு, மாடு வழங்கும் திட்டம் மற்றும் மக்கள் வாகனத்திட்டம், தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டகம் திட்டம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் மற்றும் அம்மாவின் பெயரில் இயங்கிய மினி கிளினிக் ஆகியவற்றை முடக்கி வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு இப்பொதுக்குழு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் செயலைத் தடுத்திடும் வகையில் உரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசை வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு அமைத்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிடவும், மத்திய அரசின் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து முன்னுதாரணத்தைக் கொண்டு உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, சிறையில் உள்ள எஞ்சிய 6 தமிழர்களின் விடுதலையையும் மேற்கொள்ள வேண்டும்.

மக்களிடமிருந்து வரியைப் பல வகையில் பறிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தி.மு.க. அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இல்லத்தலைவிகளுக்கான உரிமைத் தொகையான ரூ.1000 மற்றும் கேஸ் சிலிண்டருக்கான ரூ.100 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்றட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

விடியல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு யாருக்கும் விடியலைத் தராத அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

தி.மு.க. ஆட்சியின் இந்த அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் அனைத்து பலத்தோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியபோதும், தேர்தல் களத்தில் நின்று கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், கடுமையாக போட்டியிட்டவர்களுக்கும், உழைத்திட்ட கழகத்தினர் அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.

மேலும், 2024-ல் நடைபெற இருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கு கழகம் அனைத்து வகையிலும் ஆயத்தமாகி வரும் நிலையில், கழகப் பணிகளை எல்லா நிலைகளிலும் மேலும் தீவிரப்படுத்திட கழகப் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது.

கழகப் பொறுப்புகளுக்கு பொதுச்செயலாளர் அவர்களால் செய்யப்பட்ட நியமனங்களையும் இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது. கழக சட்ட விதி எண்கள் 24, 25 மற்றும் 26 ஆகியவற்றின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட கழக பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கான பதவிக்காலம் வருகிற 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. இப்பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் போது, துணைத்தலைவர் அவர்களால் தற்போது கூடுதலாக சேர்த்து கவனிக்கப்பட்டு வரும் தலைவர் பதவிக்கான தேர்தலையும் நடத்துவது என இப்பொதுக்குழு ஏக மனதாக தீர்மானிக்கிறது.

Tags:    

Similar News