உள்ளூர் செய்திகள்

திருவிழாவுக்கு அழைக்காத சித்தப்பா வெட்டிக்கொலை- கோவில் முன்பு வாலிபர் வெறிச்செயல்

Published On 2022-08-23 09:11 IST   |   Update On 2022-08-23 09:11:00 IST
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி இரண்டு நாட்களில் கோவில் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • திருவிழாவுக்கு அழைக்காததே கொலைக்கு காரணமா? என்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த பத்துவாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.

தற்போது நோய் கட்டுக்குள் வந்ததையடுத்து இந்த அண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

பல்வேறு சமூகத்தினர் வசித்து வரும் பத்துவாக்கோட்டை கிராமத்தில் மண்டகப்படி முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). விவசாய கூலித் தொழிலாளியான இவரும் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வந்தார்.

விழா நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி புறப்பாடு போன்றவற்றிலும் பங்கேற்றார். இவரது உடன் பிறந்த அண்ணன் மகன் சசிக்குமார் (30). திருமணமாகாத இவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் கணேசன் வெளியூர்களில் வசித்து வரும் தனது நெருங்கிய உறவினர்கள் பலரை திருவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் உள்ளூரில் இருக்கும் அண்ணன் மகனான சசிக்குமாரை திருவிழாவுக்கு அழைக்கவில்லையாம். இதுபற்றி சசிக்குமார் பலரிடமும் கூறி புலம்பியுள்ளார். அத்துடன் தன்னை அழைக்காத சித்தப்பா கணேசன் மீது கடுமையான ஆத்திரமும் ஏற்பட்டது.

நேற்று இரவு குறிப்பிட்ட சமூகத்தாரின் மண்டகப்படி முடிந்து அனைவரும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமியை கோவிலுக்குள் வைத்துவிட்டு புறப்பட்டனர். களைப்பு காரணமாக கணேசன் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சசிக்குமார் என்னை ஏன் திருவிழாவுக்கு அழைக்கவில்லை என்று கூறி தகராறு செய்தார். நீ உள்ளூரில்தானே இருக்கிறாய் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார்.

ஆனால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சசிக்குமார் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சராமாரியாக வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் இதுபற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரகுநாதபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

பிணமாக கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவிழாவுக்கு அழைக்காததே கொலைக்கு காரணமா? என்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரஜினி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான சசிக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி இரண்டு நாட்களில் கோவில் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News