உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த வீட்டிற்கு துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்திய காட்சி.

அந்தியூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

Published On 2023-06-28 04:55 GMT   |   Update On 2023-06-28 04:55 GMT
  • ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
  • தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

கிருஷ்ணசாமி, தங்கமணி ஆகியோர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு மளிகை கடையை பூட்டி விட்டு கிருஷ்ணசாமி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.

அப்போது இரவு 10 மணியளவில் வீட்டில் அவரது மனைவி தங்கமணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் திடீரென இவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.

பின்னர் முகமூடி நபர் திடீரென தங்கமணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலியை பறிக்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்து நகையை காப்பாற்ற தங்கமணி போராடினார்.

இதில் ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மர்மநபருடன் போராடுவதை விட்டு விட்டு கீழே விழுந்தார். இந்த நேரத்தில் தங்கமணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.

பின்னர் தோட்டத்துக்கு சென்ற அவரது கணவர் கிருஷ்ணசாமி வீடு திரும்பினார். அப்போது மனைவி தங்கமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

இதையடுத்து தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.

இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வெள்ளிதிருப்பூர் போலீசார் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தற்போது இந்த பகுதியில் கரும்பு, வாழைக்காய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வெளி இடங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே தொழிலாளர்கள் போல் வந்து யாராவது நகை பறிப்பில் ஈடுபட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News