உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சூறைக்காற்றுடன் பெய்தது: கோவில்பட்டியில் 41 மில்லிமீட்டர் மழை

Published On 2023-06-01 12:33 IST   |   Update On 2023-06-01 12:33:00 IST
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
  • கயத்தாறு அருகே கடம்பூர், மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடியில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதியில் நேற்று மாலை திடீரென பயங்கர சூறைக்காற்று வீசத்தொடங்கியது. இதனால் சாலைகளில் புழுதி புயல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தினர். தொடர்ந்து வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.

சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளை-திருவனந்தபுரம் சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. சந்திப்பு மீனாட்சிபுரத்தில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது. பாளையில் அதிகபட்சமாக 10 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. கயத்தாறு அருகே கடம்பூர், மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. கோவில்பட்டியில் சுமார் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மணியாச்சியில் 29 மில்லிமீட்டரும், கடம்பூரில் 15 மில்லிமீட்டரும், கயத்தாறில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. திடீர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News