நாகை அருகே மாற்றுத்திறனாளி அடித்து கொலை- காதல் தகராறில் கும்பல் வெறிச்செயல்
- பலத்த காயம் அடைந்த அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
- மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.
இவர்களுக்கு அய்யப்பன் (வயது 40), தினேஷ் (35) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் அய்யப்பன் மாற்றுத்திறனாளி ஆவார். தினேசும் அதே பகுதி புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகள் சுகுணா (வயது 20)வும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25 -ம் தேதி சுகுணா திடீரென வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் தினேஷ் வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகுணாவின் சகோதரர் மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் சென்னையைச் சேர்ந்த அப்துல் சலாம், வீரசேகரன், முரளி, கேசவன் ஆகியோர் தினேஷ் வீட்டிற்கு சென்று தினேசையும், அவரது அண்ணன் அய்யப்பன் மற்றும் அவர்களது பெற்றோர்களை தாக்கிவிட்டு சுகுணாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.