உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை- 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2022-08-29 12:29 IST   |   Update On 2022-08-29 12:29:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
  • மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை கொட்டி தீர்த்தது.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு 2 மணி வரை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

மொடக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் மொடக்குறிச்சி அருகே உளள 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் காலனி பகுதியில் மழைநீர் மற்றும் பவானி கிளை வாய்ககால் உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த 120 பேரை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு 46 புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இணைந்து மழைநீர் வடியவைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மழைநீர் வடியும் வரை இந்த பகுதி மக்கள் முகாமிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல் பெருந்துறை, கோபி செட்டி பாளையம், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி சாகர், பவானி,கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, எலந்தகுட்டை மேடு, அம்மாபேட்டை, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், அந்தியூர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. இதில் அதிக பட்சமாக மொடக்குறிச்சி பகுதியில் 92 மி.மீட்டர் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சுமார் 4 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து லட்சுமி நகரில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் ரோட்டில் மழைநீர தேங்கி லட்சுமி நகர் பகுதி முழுவதும் மழைநீர் சூழந்தது.

கண்ணாதாசன் நகர், கே.கே.நகர்,பகுதி வீதிகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மேடான பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், நீர்வழிப்பாதைகள் அக்கிரமிக்கப்பட்டதாலும, ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதாலும் தண்ணீர் ரோடுகளை தாண்டி லட்சுமி நகர் பஸ் நிறுத்த பகுதியில் தேங்கியது.

இந்த மழையின் காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிள்கள், கார்கள் தண்ணீரில் முழ்கியது. இதன் காரணமாக ஈரோடு-மேட்டுர் பிரதான சாலையான லட்சுமி நகருக்குள் வாகனங்கள் வராமல் பாலத்தின் மீது போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 8 மணி வரை ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் ரோடுகளில் மழைவெள்ளம் ஆறாக ஓடியது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு-38, பெருந்துறை-21,கோபிசெட்டி பாளையம் -25.4, தாளவாடி-54, சத்தியமங்கலம்-8, பவானி சாகர்-5.8, பவானி-14, கொடுமுடி-24, கொடுமுடி-2, சென்னி மலை-29, மொடக்குறிச்சி -92, கவுந்தப்பாடி-36, எலந்த குட்டைமேடு-13.4, அம்மாபேட்டை-27.2, கொடிவேரி-7.2, குண்டேரி பள்ளம்-21.2, வரட்டுபள்ளம்-21.2,

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 430.4 மி.மீ, மழை கொட்டி தீர்த்தது.

Similar News