செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.43 கோடி மோசடி- 300 பேர் போலீசில் புகார்
- செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
- இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் ஆசையை தூண்டி தீபாவளி மற்றும் நகை சிட்பண்ட் நடத்தி வந்தது.
இதனை நம்பிய பொதுமக்கள் கட்டிய தொகைக்கு அதிகமாக வழங்கிய மளிகை பொருட்கள் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த முகவர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கட்டினர்.
அந்த சிட்பண்ட் நிறுவனம் அறிவித்தபடி தீபாவளி பரிசு பொருட்கள், நகைகள் அளிக்க முடியாததால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட, ஏமாந்த முகவர்களும் பணம் கட்டிய வாடிக்கையாளர்களும் போராட்டம் நடத்தினர். அந்த நிறுவனம் கடந்த 10-ந்தேதிக்குள் பணம் கொடுப்பதாக உறுதி அளித்தது.
ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. இதனை அறிந்த ஏமாந்த முகவர்களும், பணம் கட்டியவர்களும் 10-ம்தேதி, 11-ம் தேதி போராட்டம் செய்தனர். செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் மோசடி செய்து மதிப்பு ரூ.43 கோடியாகும். தொடர்ந்து தினமும் புகார் கொடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இது போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு தொடங்கும் பொழுதே அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.