உள்ளூர் செய்திகள்

பரமக்குடியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 27 பவுன் நகைகள் திருட்டு

Published On 2023-06-28 05:12 GMT   |   Update On 2023-06-28 05:12 GMT
  • கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
  • கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. இந்த இரு கோவில்களிலும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கும்பாபிஷேக விழா நடந்தது.

கடந்த 10 நாட்களாக விழா நடந்து வந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 27 பவுன் தங்க நகைகளை திருடர்கள் நைசாக திருடி சென்றுள்ளனர்.

பரமக்குடி சவுகார் தெருவை சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி கஸ்தூரி(வயது74) என்பவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க செயின் மற்றும் மீனாட்சி நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மனைவி பூங்கொடி அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடி உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து கஸ்தூரி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் எங்கும் சி.டி.சி.டி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அதில் பெண்களிடம் நகைகளை திருடிய திருடர்களின் முகம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News