உள்ளூர் செய்திகள்

தேனி அருகே அனுமதியின்றி துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

Published On 2023-10-13 04:16 GMT   |   Update On 2023-10-13 04:16 GMT
  • மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.
  • வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலங்களை கொண்டதாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை, போடி மெட்டு, குமுளி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மலை ஸ்தலங்களுக்கு வருகின்றனர். மேகமலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் இறைச்சி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில் ஓடைப்பட்டி பிரிவு அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அனந்தப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர்.

வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்த போது அதில் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பைக்கில் வந்த வருசநாடு காந்தி கிராமத்தைச் சேர்ந்த ஜெயம் (வயது 30), அஜித் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டைக்கு சென்றனரா? மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News