உள்ளூர் செய்திகள்

தேர்வில் மதிப்பெண் குறையும் பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2022-06-07 11:17 GMT   |   Update On 2022-06-07 11:17 GMT
தேர்வில் மதிப்பெண் குறையும் என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியைஅடுத்த நசரத்பேட்டை, நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சதீஷ்(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இறுதி தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நிலையில் சதீஷ், தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டார். மேலும் தேர்வு முடிவில் குறைவான மதிப்பெண் வரும் என்று புலம்பி வந்தார்.

இதற்கிடையே நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற சதீஷ் பின்னர் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது மகன் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சதீஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு வீட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும். எனது படிப்பிற்காக மேற்கொண்டு செலவு செய்ய வேண்டாம். எனவே தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News