உள்ளூர் செய்திகள்
தொரப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை டிரோன் மூலம் கண்காணிப்பு
- பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
- அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் கடந்த சில வாரங்களாக ஒரு காட்டு யானை ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானை ஈப்பன்காடு வழியாக தொரப்பள்ளி, புத்தூர்வயல் பகுதிக்குள் பகல் நேரத்திலும் முகாமிட்டு வருகிறது. இதனால் யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் அடங்கிய 2 குழுக்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை இருக்கும் இடத்தை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.