உள்ளூர் செய்திகள்

விடுமுறை அளிக்க வலியுறுத்தி பள்ளி முன்பு பெற்றோர் குவிந்திருந்த காட்சி. 

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் விடுமுறை அளிக்க கூறி பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு

Published On 2022-11-03 06:39 GMT   |   Update On 2022-11-03 06:39 GMT
  • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
  • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News