சேவலை பலியிட்ட கிராம மக்கள்.
தடையை மீறி கோவில் வாசலில் பொங்கல் வைத்த கிராம மக்கள்
- திருப்பத்தூர் அருகே தடையை மீறி கோவில் வாசலில் கிராம மக்கள் பொங்கல் வைத்தனர்.
- தற்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பூங்குன்ற நாடு என அழைக்கப்படும் 24 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட மகிபா பாலன்பட்டியில் பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி செவ்வாயன்று காவனூர் கிராம மக்கள் ஒன்றுகூடி ஆற்றின் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து வந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்த ஆண்டும் காவனூர் கிராம மக்கள் விழா நடத்த ஏற்பாடு செய்தனர். இதில் சிலரை ஒதுக்கிவைத்துவிட்டு பொங்கல் திருவிழா நடத்துவதாகவும், தங்களையும் சேர்த்து விழா நடத்த வேண்டும் என்றும் சிலர் எழுப்பிய பிரச்சினையால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவில் விழாவை நடத்த வேண்டும், இல்லை என்றால் விழாவை நடத்தக் கூடாது என்று வட்டாட்சியர் தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதில் இரு தரப்பினரும் சமாதானம் ஆகாததால் பொங்கல் திருவிழாவை நடத்த தடை விதித்து திருப்பத்தூர் தாசில்தார் உத்தரவிட்டார்.
புரட்டாசி 2-வது செவ்வாய்கிழமையன்று விழா நடத்த கிராமத்தினர் முடிவு செய்த நிலையில், தடை கோரி எதிர்தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தடை உத்தரவை மீறி புரட்டாசி 4-வது செவ்வாய்க்கிழமையான நேற்று 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வாசலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், நேர்த்திக்கடனாக சேவலை பலியிட்டும் விழா கொண்டாடினர்.
தடையை மீறி பொங்கல் வைக்க முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால், கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.
தற்போது அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கிராம மக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, சேவல் வெட்டி வழிபாடு நடத்திய பின்பு காவனூர் கிராமத்திற்கு நடந்து சென்றனர்.