உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு மற்றும் பலர் உள்ளனர்.

ரூ. 28.20 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நல உதவிகள்

Published On 2022-08-27 05:43 GMT   |   Update On 2022-08-27 05:43 GMT
  • சிவகங்கையில் ரூ. 28.20 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
  • நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது.

இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்திடவும், தமிழக அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை பெற்றிட தேவையான சான்றிதழ்களை வழங்க துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்றி வேண்டும். நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைக்கவும், புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கவும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் தலா ரூ.21 ஆயிரத்து 432 வீதம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 160 மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 51 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 12ஆயிரத்து 852 மதிப்பிலான பயிர்க்கடனுதவிகள் மற்றும் செம்மறி ஆடுகள், கறவை மாடு என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 12 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) தனபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News