உள்ளூர் செய்திகள்

சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம்

Published On 2022-11-25 13:50 IST   |   Update On 2022-11-25 13:50:00 IST
  • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
  • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

Tags:    

Similar News