உள்ளூர் செய்திகள்

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறை பாராட்டு

Published On 2022-10-23 08:38 GMT   |   Update On 2022-10-23 08:38 GMT
  • பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
  • 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News