கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும்
- கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
- கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பில்லுர் ஊராட்சி அலுபிள்ளை தாங்கி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் சம்பா நெல் சாகு படி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவில் மழை இல்லை.
கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் இங்கு பயிரிடப்பட்ட 300ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும், சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில், தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது.
இது குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம், கடந்த டிசம்பர் 26-ந் தேதி புகார் தெரிவித்தோம். அவர் உடனடியாக நடவடிக்கை கள் எடுக்கவும் உத்தரவு விட்டார்.
மேலும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அதனை போட்டோ எடுத்து சென்றனர். ஆனால் அதன் பின் அதிகாரிகள் நடவடிக்கை கள் எடுக்கவில்லை.
எனவே இந்தப்பகுதியில் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.