ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்.
காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்
- ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
- காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.
இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.