உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ

Published On 2023-02-17 15:28 IST   |   Update On 2023-02-17 15:28:00 IST
  • பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒரு கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது- அந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ராஜா (வயது 59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதே போல் அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவியை ஆய்வக உதவியாளர் நடேசன்(59) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்கள். இது குறித்து 3 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்து பூர்வமாக புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர், பள்ளிக்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ரகுராமன், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News