கோவையில் செந்தில்பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேர் கைது
- திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை போன்ற துறைகளை பா.ஜனதா அரசியலுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் நாகராஜன் தலைமையில் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என கோரி சாலையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 -க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.