உள்ளூர் செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பாதுகாப்பு

Published On 2022-07-10 09:44 GMT   |   Update On 2022-07-10 09:44 GMT
  • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
  • வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி கிராம ஊராட்சியின் வார்டு எண்-3க்கான உறுப்பினர் தேர்தல் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முகமது அனஸ் ராஜா, முகமது இஸ்மாயில், சம்சுதீன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். ஒரு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்கள் 494, பதிவான வாக்கு எண்ணிக்கை 285, இதில் ஆண் வாக்காளர்கள் 122, பெண் வாக்காளர்கள் 163, மொத்தம் 58 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்கு முடிந்தவுடன் வாக்கு எந்திரங்களை மூடி முத்திரையீட்டு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தேர்தல் பார்வையாளர் சங்கரன் வாக்கு பதிவு நடைபெறும் மையத்தினை பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், மண்டல அலுவலர் கண்ணன், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுகுமார், உதவியாளர்கள் மோகன்ராஜ், தங்கப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

Tags:    

Similar News