உள்ளூர் செய்திகள்

கொந்தளிப்பான கடல். 

தரங்கம்பாடியில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2022-12-09 09:57 GMT   |   Update On 2022-12-09 09:57 GMT
  • வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
  • 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

தரங்கம்பாடி:

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகளும் 15,000 பைபர் படகுகளும் உள்ள நிலையில் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி உள்ளனர். தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக பகுதியில் பல அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்கின்றன.

துறைமுகத்தின் தடுப்புச் சுவர்களை அலைகள் மோதி தாண்டி உள்ளே நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல் மீனவர்களுக்கும் மீனவர் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு இது போன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவும் கடனுதவி பெறவும் பெரும் வசதியாக இருக்கும் என்று மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News