உள்ளூர் செய்திகள்

தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்

Published On 2023-08-13 14:13 IST   |   Update On 2023-08-13 14:13:00 IST
  • கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
  • வனத்துறை சார்பில் மசினகுடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக முகாமில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்காக மசினகுடி, கார்குடி பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.அதன் பிறகு அங்கு வந்திருந்த மாணவர்களிடம் யானையின் முக்கியத்துவம், யானைகளால் மனிதர்களுக்கு உள்ள பயன்கள், மேலும் யானைகளால் காடுகள் வளர்ச்சி அடை வது, பல்வேறு புதிய தாவரங்கள் உருவாவது குறித்து வனச்சரகர்கள் தயானந்தன், ஜான் பீட்டர் ஆகியோர் எடுத்து ரைத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்டிருந்த சிறப்பு உணவுகளான ராகி, கேழ்வரகு, அரிசி, தாது உப்பு, பழங்கள், தேங்காய், கரும்பு, போன்ற சிறப்பு உணவுகள் வழங்கி யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

பின்னர் தமிழக-கர்நாடகா எல்லையான கக்க நல்லாவில் சுற்றுலா பயணிகளுக்கு யானைகளை பாதுகாப்பது குறித்து மாணவர்கள், வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யானைகள் உருவம் கொண்ட முகமூடியை அணிந்து இருந்தனர்.

இதேபோல் வனத்துறை சார்பில் மசினகுடியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் மாணவர்களிடம் வனத்துறையினர் பேசும்போது, யானைகளை பாதுகாப்பது வனப்பகுதியை பாதுகாப்பதாகும்.

மனிதர்கள் பட்டாசு வெடித்தல், விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளால் யானைக்கு கோபம் வந்து மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. யானைகளால் எந்த தொந்தரவும் வராது என்றனர்.

Tags:    

Similar News