உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம்

Published On 2022-07-07 10:19 GMT   |   Update On 2022-07-07 10:19 GMT
  • போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் நாளான இன்று பலர் திரண்டனர்.
  • தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

சேலம்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 2 -ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைத்துறையில் உள்ள 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்புத்துறையில் உள்ள தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

விண்ணப்பப்பதிவு தொடங்கியது

இதில் 2-ம் நிலை ஆயுதப்படை போலீசார் 2,180 , சிறப்பு காவல் படை போலீசார் 1091 , 2-ம் நிலை சிறை காவலர் 161, தீயணைப்பாளர்கள் 120 என மொத்தம் 3552 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கு இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டம் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

உதவி மையம் ஏற்பாடு

இதில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உதவ இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவி மையம் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதன்படி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் பலர் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வந்தனர். இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் செயல் விளக்கம் அளித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் அறிவித்துள்ள 3552 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்க உதவி வேண்டுவோர் இந்த மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக அணுகலாம். மேலும் விபரம் பெற 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறினர்.

சம்பளம் ரூ. 67 ஆயிரம்

எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளில் தேர்வாகி பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியம் ரூ. 67 ஆயிரத்து 100 வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News