உள்ளூர் செய்திகள்

மழை தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் திருமணிமுத்தாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தூய்மை பணியாளர்கள் திடீரெனதிருமணிமுத்தாற்றில் இறங்கி போராட்டம்-பரபரப்பு

Published On 2023-10-11 15:04 IST   |   Update On 2023-10-11 15:04:00 IST
  • தூய்மை பணியாளர்கள் திடீரென இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணாளன் தலைமை தாங்கினார்.

சேலம்:

சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியமனம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாரவிடுமுறை

அப்போது அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், வார விடுமுறை மற்றும் ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவை அமல்படுத்தக் கோரியும் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக பணியிடமாற்றம் செய்ததை ரத்து கோரியும் வலியுறுத்தினர்.

100-க்கும் மேற்பட்டோர்

இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணாளன் தலைமை தாங்கினார். ஆற்றில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து டவுண் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் நாங்கள் ஆற்றில் இருந்து மேலே வருவோம் என கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் பத்திரமாக ஆற்றில் இருந்து கரைக்கு வந்தனர்.

ரூ.9,700 சம்பளம்

இது குறித்து அவர்கள் கூறுகையில், சேலம் மாநகாட்சியில் 700-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றோம். கடந்த மாதம் வரை மாநகராட்சி மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாதம் ரூ.11 ஆயிரத்து 600 ரூபாய் கூலி வாங்கி வந்தோம். தற்போது இந்த மாதம் ரூ.9,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News