ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
சுதந்திர தின விடுமுறையையொட்டிஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.
- சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது.
ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இன்று 76-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா , சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட் , படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை யொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இச்சூழலை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வருவதால் இன்று மலை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகாலையில் இருந்தே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தப்படி சாரை, சாரையாக மலை பாதை வழியாக ஏற்காடுக்கு வந்தபடி இருந்தது. பொதுவாக சேலத்தில் இருந்து 45 நிமிடத்தில் ஏற்காடு வந்துவிடலாம். ஆனால் இன்று வாகன நெரிசலால் மலை பாதை வழியாக ஏற்காடு வர 2, 3 மணி நேரம் வரை ஆனது. இதனால் ஏற்காடு மலை பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உள்ளூர் கடைக்காரர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
இதுபோல் மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகு வழியாக சீறி பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
மேட்டூர் அணைைய ஒட்டியுள்ள அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பூங்காவை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
கொல்லிமலை
பிரசித்தி பெற்ற கொல்லிமலையிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. செம்மேடு, கொல்லிலை அறப்பளீஸ்வரர் கோவில், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். ஆகாய கங்கை நிர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.