உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசிய காட்சி. அருகில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் உள்ளனர். 

மழைநீர், கழிவு நீர் தேங்குவதால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தல்

Published On 2023-11-30 10:07 GMT   |   Update On 2023-11-30 10:27 GMT
  • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
  • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சேலம்:

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News