உள்ளூர் செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறைஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-09-16 13:29 IST   |   Update On 2023-09-16 13:29:00 IST
  • ஏற்காட்டில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
  • கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஏற்காடு:

ஏழைகளில் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

அவர்கள் ஏற்காடு அண்ணாபூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஆகியவற்றை பார்வையிட்டு படகு இல்லத்தில் படகில் சென்று ரசிப்பார்கள்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சீசன் களை கட்டும். பின்னர் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள், அரசு தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

மழை

கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் மழையின் காரணமாக கடுங் குளிர் நிலவி வருகிறது.

குறிப்பாக மாலை மற்றும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலை பாதையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி மெதுவாக வந்து செல்கிறது.

இந்த நிலையில் சனி, ஞாயிறு, மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை யொட்டி நேற்று இரவு முதலே ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.

அலைமோதும் கூட்டம்

ஏற்காடு பகுதியில் இன்று அதிகாலை நிலவிய பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் காலை நேரத்தி லேயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

தற்போது ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு பகுதிகளில் குளிரில் நடுங்கியப்படி சுற்றுலா பயணிகள் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, டெல்லி அப்பளம் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டனர்.

Tags:    

Similar News