ராமநாதபுரம் கைதிகள் 2 பேரை காவலில் எடுத்து விசாரணை
- ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த வழிப்பறியில் தொடர்புடைய காரைக்குடி அருகே கோட்டை யூர் அடுத்த வேளாண்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (32), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விஸ்வாரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோர் வேறொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் இரு வரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். கோர்டு அனுமதி அளித்ததன் பேரில் சூரமங்கலம் போலீசார் பாண்டியன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.