உள்ளூர் செய்திகள்

சேலம் முள்ளுவாடிகேட்டில் அரசு டவுன் பஸ் போலீஸ் நிழற்குடையில் மோதியது

Published On 2023-05-11 14:59 IST   |   Update On 2023-05-11 14:59:00 IST
  • சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • இதனால் ஒரு வழிபாதை மட்டுமே செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.

சேலம்:

சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிபாதை மட்டுமே செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக ெரயில் வரும் நேரங்களில் வழக்கத்தை விட அதிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையத்தி லிருந்து இன்று காலை அஸ்தம்பட்டி வழியாக ஜங்ஷனுக்கு செல்லும் அரசு டவுன் பஸ் முள்ளுவாடி கேட் அருகே வளைவில் திரும்பும்போது அங்குள்ள போக்குவரத்து காவல்துறையின் நிழற்குடை யின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிழற்குடை தலைகீழாக சாய்ந்தது.

இந்த விபத்து ஏற்பட்ட போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக விரைந்து வந்து சாய்ந்த நிழற்குடையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் நிழற்குடை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே ஒரு வழி பாதையாக இருக்கக்கூடிய இந்த தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இதுபோன்று வேறு பெரிய விபத்து ஏதும் நேரிடுவதற்கு முன்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News