உள்ளூர் செய்திகள்

தரமற்ற இறைச்சிகள் விற்பனையா? கோத்தகிரி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2022-08-26 10:38 GMT   |   Update On 2022-08-26 10:38 GMT
  • மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
  • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ராஜன் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளுக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? பாதுகாப்பான முறையில் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக்கடை மற்றும் பேக்கரிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா, உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் ஜலீல் என்பவரது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வித்திதனர்.

அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.

அவ்வாறு உரிமம் இல்லாமல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News