உள்ளூர் செய்திகள்

பட்டாசு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-08-07 15:54 IST   |   Update On 2023-08-07 15:54:00 IST
  • பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில், பட்டாசு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசுக் கடைகளை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார்,வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அரசு வழிகாட்டு முறையில் பட்டாசுக் கடைகளை நடத்த வேண்டும் என விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஓசூர் அட்கோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள், வியாபாரிகளுக்கு அட்கோ போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மேலும் இதில், மின் வாரிய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டாசுக் கடைகளை அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

மின் மீட்டர் பெட்டியை அறையின் உள்ளே வைக்காமல், வெளியே வைக்க வேண்டும். அப்போது தான் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர் சபரி வேலன் மற்றும் பட்டாசு கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News