உள்ளூர் செய்திகள்

கோவை சரகத்தில் 10 மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களில் ரூ.67 லட்சம் அபராதம் வசூல்

Published On 2022-12-02 09:09 GMT   |   Update On 2022-12-02 09:09 GMT
  • அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக செலுத்த வேண்டும்.
  • விபத்து ஏற்படும் அளவிற்கும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

கோவை,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விதிமுறை மீறல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதி மற்றும் பல்வேறு பகுதியில் அவ்வப்போது தணிக்கை நடத்தி விதிமுறை மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக செலுத்த வேண்டும். பர்மிட், இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்சு இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமரன் கூறியதாவது:-

கோவை சரகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 3,147 வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிக பாரம், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியது. போக்குவரத்து விதிகளை பின் பற்றாமல் இயங்கியது, உரிய கட்டணம் செலுத்தாமல் இயங்கியது, ஹெல்மெட், சீட் பெல்ட் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறிய வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் ரூ.28.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர இணக்ககட்டணம், வரியினங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்பட்ட கட்டணங்கள் என கடந்த 10 மாதத்தில் சரக போக்குவரத்து அலுவலகங்களின் மூலமாக ரூ.67.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றியது, கூடுதல் கட்டணம் என பல்வேறு முறைகேடு காரணமாக சரக அளவில் 256 வாகனங்கள் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலமாக சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களில் ஓவர் லோடு தொடர்பாக அதிக புகார்கள் வருகிறது. வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே சரக்குகளை ஏற்ற வேண்டும் அதிக வேகம், போக்குவரத்து விதிமுறை மீறல், ஓவர் லோடு ஏற்றி வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. விபத்து ஏற்படும் அளவிற்கும் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News